தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தினால், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வரை சேமிக்க முடிவதாகவும், அவர்களது வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை இந்த திட்டம் ஏற்படுத்தி இருப்பதாகவும் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கான மாநில அரசின் இலவச பேருந்து பயண திட்டம் தொடர்பாக, குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு ( Citizen
Consumer and Civic Action Group -CAG), சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருவாரூர், திருநெல்வேலி, மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஆறு நகரங்களில் உள்ள வெவ்வேறு வயது மற்றும் சமூக – பொருளாதார பின்னணி கொண்ட 3,000 பெண்களிடம் ஆய்வு நடத்தியது.
மாதம் ரூ. 1,000 சேமிப்பு
இதில் பங்கேற்றவர்கள், இந்த இலவச பேருந்து திட்டத்தினால் தங்களுக்கு மாதம் ரூ.600-800 வரை சேமிக்க முடிவதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம், ஆய்வில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த பெண்களில் 50 சதவீதம் பேர், தங்களால் மாதம் 1000 ரூபாய் வரை சேமிக்க முடிவதாகவும், அதனைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான பிற செலவுகளைச் சமாளிக்க முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெண்களில் 90 சதவிகிதம் பேர் மாதத்திற்கு 20,000 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கும் நிலையில், அதனை கருத்தில் கொள்ளும்போது, அவர்களுக்கு இந்த சேமிப்பு பணம் மிகப்பெரியது என்றும், இத்திட்டத்தின் மூலம் பயனடையும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் இந்த பெண்கள், தாங்கள் சேமித்த இந்த பணத்தை பெரும்பாலும் வீட்டுத் தேவைகள், குடும்பத்திற்கான உணவு மற்றும் கல்விக்கு செலவிடுவதாகவும், 18 பெண்கள் மட்டுமே ஓய்வு அல்லது தனிப்பட்ட பராமரிப்பு போன்ற குடும்பம் அல்லாத செலவுகளுக்கு இந்த பணத்தை செலவிடுவதாகவும் கூறியுள்ளனர்.
ஆட்டோ, ஷேர் ஆட்டோவில் குறைந்த கூட்டம்
அதே சமயம், இந்த திட்டத்தின் விளைவாக தனியார் வாகனங்கள் தவிர, ஷேர்ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோரிக்ஷாக்கள் போன்ற பிற போக்குவரத்து வகைகளில் ஓரளவு கூட்டம் குறைந்துள்ளது என்பதும் இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்த இன்னொரு முக்கியமான விஷயம் ஆகும்.
“இந்த இலவச பேருந்து பயணத் திட்டம் அமலானதிலிருந்து இதுவரை 424 கோடி பெண்கள், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதற்காக அரசு 6,788 கோடி ரூபாய் மானியம் செலுத்தியுள்ளது.
ஒவ்வொரு பெண் பயணிக்கும் அரசு மானியம் வழங்கி, போக்குவரத்து கழகங்களின் வருவாயை மேம்படுத்தியுள்ளது. சென்னை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மட்டும் 88.87 கோடி பெண்கள் சவாரி செய்துள்ளதால், இதுவரை 1,422 கோடி ரூபாய் மானியமாக கிடைத்துள்ளது,” என்கிறார் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் ( MTC) நிர்வாக இயக்குநர் ஜான் வர்க்கீஸ்.
மேம்படும் பெண்களின் மன ஆரோக்கியம்
“இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெண்களை எவ்வித நோக்கமுமின்றி வீட்டை விட்டு வெளியேறவும், அலையவுமே இது ஊக்குவிக்கிறது’ என்ற எதிர்மறையான கருத்து கூறப்பட்டது. ஆனால், எப்போதும் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்கள் இப்போது பொழுதுபோக்கிற்காகவும் தனிப்பட்ட நேரத்திற்காகவும் கோவில்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பெண்களுக்கும் அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சில தனிப்பட்ட நேரம் தேவைப்படுகிறது, இது நேர்மறையான ஒன்றாக பார்க்கப்பட வேண்டும்” என்கிறார் CAG ஆய்வுக்குழுவைச் சேர்ந்த சுமனா நாராயணன்.
எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் நீட்டிக்க வாய்ப்பு
இந்த நிலையில், ஆய்வில் பங்கேற்ற சென்னை பெண்கள் 500 பேரில் 65 சதவீதம் பேர், போக்குவரத்து பயன்பாடு அதிகம் உள்ள காலை, மாலை வேளைகளில் ( Peak Hour ), கூட்டம் அதிகமாக உள்ளதால் பிங்க் நிற பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக MTC நிர்வாக இயக்குநர் ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 10 ஆண்களில் 8 பேர் வேலைக்குச் செல்வதாக சொல்லப்படும் ஆய்வுடன் ஒப்பிடும்போது, 10 பெண்களில் 2 பேர் மட்டுமே வீட்டிற்கு வெளியே பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் கொண்டுவந்துள்ள இது போன்ற திட்டங்கள், பணிக்குச் செல்வதில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறைப்பதோடு, சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்கு வழி வகுக்குகின்றன என்பதால்தான், கர்நாடகா போன்ற பிற மாநிலங்களும் இந்த இலவச பேருந்து திட்டத்தை, தங்களது மாநிலங்களிலும் செயல்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.