நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு வருகின்ற 10 -ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது சுற்றுலா பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வர்த்தகர்கள் தரப்பிலும் இதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதியுடன், டிக்கெட் கட்டணம் ஒரு நபருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் 6500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட “சிரியா பாணி” என்ற கப்பல்தான் இந்த பயணிகள் சேவை கப்பலாக இயக்கப்பட உள்ளது. 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பலின் சோதனை ஓட்டம் 8 மற்றும் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த கப்பல் போக்குவரத்து பணிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தி உள்ளன.
முன்னதாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி மூலம் கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால், பயண நேரம் 3.30 முதல் 4 மணி நேரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.