ஐஐடி, ஐஐஎம் போன்ற நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பல்கலை கழக மானியக் குழு எனப்படும் யு.ஜி.சி (UGC)வெளியிட்ட அறிவிப்பு இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டுவதற்காக ஆழம் பார்க்கும் நடவடிக்கை என விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்த அறிவிப்பின் பின்னணி என்ன, இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஏன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பது குறித்து விரிவான அலசல் இங்கே…
யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வரைவு – வழிகாட்டுதல்களை உருவாக்கி யுஜிசி கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் ஓபிசி (OBC), எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ‘‘தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்காவிட்டால்’’ அந்த இடங்களை ரத்து செய்து, பொது பிரிவாக அறிவித்து, மற்ற பிரிவினரை – அதாவது முற்பட்ட பிரிவினரை பணி நியமனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு, இந்த அறிக்கை மீது ஜனவரி 28 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
யுஜிசி-யின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக திமுக, பாமக, இடதுசாரி கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்று இக்கட்சிகள் வலியுறுத்தின.
எதிர்ப்பினால் பின்வாங்கிய ஒன்றிய அரசு
இவ்வாறு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என ஒன்றிய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் பின் வாங்கியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு அளித்த விளக்கத்தில், “உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப அனுமதிக்கும் திட்டம் இல்லை. பல்கலைக்கழக மானியக்குழுவால் அவ்வாறு செய்ய முடியாது” என்று கூறி இருந்தது. அதேபோன்று யுஜிசி தரப்பிலும், தகுதியானவர்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழம் பார்க்கும் நடவடிக்கையா?
இந்த நிலையில், யுஜிசி மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டுவதற்காக ஆழம் பார்க்கும் நடவடிக்கை என்றும் நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் அவசர அவசரமாக இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு வாபஸ் பெற வைத்துள்ளதாகவும் தமிழக கட்சிகள் விமர்சித்துள்ளன. இது குறித்து திமுக மாணவர் அணி, “ இடஒதுக்கீடு பற்றி முடிவெடுப்பதற்கு யுஜிசி-க்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஏன் இத்தனை நாள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கல்வித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவிக்க மறந்திருந்திருக்கிறார். மறந்திருந்தார் என்றுச் சொல்வதை விட, குட்டி விட்டு ஆழம் பார்க்கலாம் என்ற ஒரு பெரும் சதி திட்ட நோக்கத்திலேயே இதை நிறைவேற்றி விடலாம் என்று காத்திருந்தனர்” எனக் காட்டமாக கூறி உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இனியும் இதுபோன்ற இடஒதுக்கீட்டிற்கு எதிரான எந்த செயலையும் செய்ய பாஜக. அரசு முற்படக்கூடாது. அரசியல் அமைப்பு சட்டம் வழங்காத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைக்கிற யுஜிசி-யின் தலைவராக விளங்கும் ஜெகதீஷ்குமார் அறிவித்த அறிவிப்பு மிகப்பெரிய கண்டனத்திற்குரியது. யுஜிசி-யை எதிர்த்தும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான தனது சதித் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்” எனத் தெரிவித்துள்ளது.
அதேபோன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்கலைக் கழக மானியக் குழு அறிவிப்புக்கு சுனாமிபோல எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியதைக் கண்டு, ஒன்றிய கல்வி அமைச்சகம், ‘அய்யோ, இப்படி பொதுத் தேர்தல் சமயத்தில், இந்தப் பூனைக்குட்டியை வெளியே விட்டுவிட்டதே – இந்த யு.ஜி.சி.மூலம் நாம் இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு முக்கியக் கல்லாகப் பிடுங்கி எடுத்து, கட்டடத்தையே வீழ்த்திட போட்ட ரகசியத் திட்டம் வெளியாகிவிட்டதே’ என்று புரிந்து, உடனடியாக இந்த அறிவிப்பு ‘வாபஸ்’ வாங்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளது!
இது ஒரு ஆழம் பார்க்கும் வெள்ளோட்டம்; இப்படி ஓர் அறிவிப்பு இப்போது பின்வாங்கப்பட்டாலும், தேர்தல் முடிந்து மீண்டும் பலவித தந்திரங்களாலும், பக்தி மயக்க பிஸ்கெட்டுகளாலும் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி அமைய – மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிட்டால், இத்திட்டம் வெளிப்படையாகவே அது சட்டமாகவே ஆகிவிடும் பேராபத்து உள்ளது; அந்தக் கரு கலைக்கப்படவில்லை. அந்த ஆர்.எஸ்.எஸ். இட ஒதுக்கீடு ரத்து திட்டம் என்ற பாம்பு தன் விஷத்தோடு மீண்டும் புற்றுக்கு வெளியே தலைநீட்டி நோட்டம் பார்த்தபின், உள்வாங்கியுள்ளது!
புற்றும், பாம்பும் அப்படியே ‘தற்கால சாந்தி’யாக தலையை உள்ளே இழுத்துக் கொண்டதாலேயே இத்திட்டம் இனி வராது என்று எவரும் எண்ணி அலட்சியமாக சும்மா இருந்துவிடக் கூடாது! பி.ஜே.பி. ஆட்சி- மோடி ஆட்சி மீண்டும் ஏற்பட்டால், இந்த இட ஒதுக்கீட்டினை ‘‘தோலிருக்க சுளை முழுங்கியதுபோல்’’ ஆகி ஒரே அடியாக ஒழித்துவிடுவதே ஆர்.எஸ்.எஸின் இலக்கு. எனவே, மாணவர்களே, 18 வயது இளைய வாக்காளர்களே, இளந்தலைமுறையினரே, உங்கள் எதிர்கால இருள்பற்றி கவலையோடு சிந்தியுங்கள்! வாக்காளர்களாகிய நீங்களும் புரிந்து, மற்றவர்களுக்கும் தெளிவுபடுத்துங்கள்!” எனக் கூறியுள்ளார்.
இதேபோன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி என்பது உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டு, நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது தெரிந்திருந்தும் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு விதிகளை வெளியிட்டது ஏன்?. அதன் மீது கடந்த ஒரு மாதமாக கருத்துகள் கேட்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன்?. ஒருவேளை எந்த எதிர்ப்பும் எழுந்திருக்காவிட்டால், வரைவு விதிகள் இறுதி விதிகளாக மாற்றப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு சட்டவிரோதமாக ரத்து செய்யபட்டிருக்குமா, இல்லையா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இட ஒதுக்கீடு நடப்பில் இருக்கும்போதே மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சாதி ஆதிக்க போக்கு வெளிப்படுவதை பார்க்கிறோம். இப்போது உள்ள இடஒதுக்கீடும் பறிக்கப்பட்டால் கல்வி நிறுவனங்கள் சிதைந்து சமூக நீதி கெடுக்கப்படும். மேலும் இந்த தாக்குதல் பிற துறைகளிலும் முன்னெடுக்க உதாரணம் உருவாகும்.நாட்டின் கோடிக்கணக்கான எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இளைஞர்/இளம் பெண்களின் சமூக பாதுகாப்பான வேலை உரிமையை பறித்து, சாதி அநீதியை நிலைநாட்ட முயற்சிக்கும் பாஜகவின் இந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியதாகும்” எனக் கூறியுள்ளார்.