Amazing Tamilnadu – Tamil News Updates

உயர்தர பால் உற்பத்தி… எருமை வளர்ப்புக்கு ஊக்கம்… ஆவின் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்!

வின் நிறுவனம் சுமார் 3.80 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.

பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமேயாகும்.

2,000 எருமைக் கன்றுகளைத் தத்தெடுப்பு

அந்த வகையில், ஆவின் நிறுவனம் கொழுப்புச் சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து சுமார் 2,000 எருமைக் கன்றுகளைத் தத்தெடுத்துள்ளது. பொதுவாக எருமை வளர்ப்பு, விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதாக இருந்தாலும், செலவு மற்றும் வெப்ப நிலைகளால் ஏற்படும் பிரச்னைகளால் எருமை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனை கருத்தில்கொண்டும் எருமை மாடுகள் வளர்க்கும் செலவைத் தாங்க முடியாத விவசாயிகளுக்கு, கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உதவி செய்யப்படும் என்றும் ஆவின் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எருமை மாடுகளின் எண்ணிக்கை கடந்த 2007 ஆம் ஆண்டு 11.8 லட்சமாக இருந்தது. இது, 2019 கணக்கெடுப்பின்படி 5.19 லட்சமாக குறைந்துள்ளது. பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் பால் உற்பத்தியும் மேம்பட்டு உள்ளது. எனவே, ‘தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகளைத் தத்தெடுக்க ரூ. 8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், 6 மாத வயதுடைய பெண் எருமைக் கன்றுகள் தேர்வு செய்யப்படும். அவற்றுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு 32 மாதம் வரை கண்காணித்து உணவு மற்றும் தாதுக் கலவைகள் வழங்கப்படும். பால் பண்ணையாளர்களுக்கு புரதம் நிறைந்த தீவனம், தாதுக் கலவைகளை 26 மாதங்களுக்கு வழங்குவதுடன் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.

கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தி

இந்த பராமரிப்பின் மூலம் ஒரு நாளைக்கு 1.5 கிலோ வரை எடை அதிகரிக்கும். பின்னர் 26 முதல் 32 மாதம் வரை ஒரு நாளைக்கு 1.75 கிலோ அதிகரிக்கும். கன்றுகளின் எடையை வாரந்தோறும் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். எருமை வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபம் தரக் கூடியதாக இருந்தாலும் செலவு மற்றும் தட்பவெப்ப நிலைகள் சந்திக்கும் பிரச்னைகளை மனதில் கொண்டு எருமை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த புதிய திட்டத்தின் மூலம் அறிவியல் தொழில் நுட்ப முறையில் செயற்கை கருவூட்டல் மூலம் இனப்பெருக்க நுட்பங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தி மேம்படும்.

இது தொடர்பாக பேசிய ஆவின் நிர்வாக இயக்குநர் எஸ். வினீத், “கன்று வளர்ப்பு முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், உயர்தர பாலுக்கான முதன்மை ஆதாரமாக விளங்கும் எருமை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version