Amazing Tamilnadu – Tamil News Updates

அப்பாடா… ரயில் நிலையங்களில் இனி ‘இந்தி’ ஊழியர்களுடன் மல்லுகட்ட வேண்டாம்!

மிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சமீப காலமாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் காணப்படுகின்றனர். கேங்மேன் தொடங்கி, டிக்கெட் வழங்குபவர்கள், பரிசோதர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், கேட்டரிங் ஊழியர்கள், லோகோ பைலட்கள் என இந்தி மொழி பேசுபவர்களே அதிகம்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ்மொழி தெரிவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, ஆங்கிலமும் அவ்வளவாக தெரிவதில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பயணிகள் மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுமே இதே பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.

டிக்கெட் கவுன்ட்டர்களில் மல்லுகட்டு

அதிலும், இதில் அதிகம் பிரச்னையை எதிர்கொள்வது டிக்கெட் கவுன்ட்டர்களில்தான். டிக்கெட் கவுண்டர்களில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. இதனால், முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும்போது, கவுன்ட்டரில் இருக்கும் ஊழியர்களுக்கு சொல்லி புரிய வைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுவதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

குறிப்பாக ‘தட்கல்’ டிக்கெட்டுகளை எடுக்கும்போது, முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளேயே டிக்கெட்டுகள் அனைத்தும் நிரம்பிவிடும். இதனால், டிக்கெட் கவுன்ட்டரில் இருப்பவர் வேகமாக பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை ‘டைப்’ செய்ய வேண்டும். ஆனால், மொழி பிரச்னையில் இது தாமதமாகி விடுவதால், டிக்கெட் கிடைக்காத நிலையே ஏற்படுகிறது. இதனாலேயே, டிக்கெட் கவுன்ட்டரில் இருக்கும் வடமாநில ஊழியருக்கும் டிக்கெட் எடுக்க வரும் நம்ம ஊர் ஆட்களுக்கும் பல ரயில் நிலையங்களில் தகராறு ஏற்படுவதாக அடிக்கடி செய்திகள் வெளியாவது உண்டு.

கோவில்பட்டியில் வெடித்த பிரச்னை

கடந்த பிப்ரவரி மாதத்தில் கூட, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டு, போலீஸ் வந்து நிலைமையை சமாளிக்கும் அளவுக்கு மோசமானது.

தெற்கு ரயில்வே எடுத்த முடிவு

இப்படியான நிலைமை, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளாவிலும் காணப்படுகிறது. இது குறித்த புகார்கள் அதிகம் வந்ததைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் பணியமர்த்தப்பட்டுள்ள பிற மாநில ஊழியர்களுக்கு பிராந்திய மொழி கற்பிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கும், முன்களத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கும் இடையிலான மொழி சார்ந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

தமிழ் கற்றுக்கொடுக்க ஏற்பாடு

“தமிழகம் மற்றும் கேரளாவில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு உள்ளூர் மொழி அறவே தெரியவில்லை. அதை ரயில்வே நிர்வாகம் அறிந்த நிலையில் மக்களுக்கும், நிர்வாகத்துக்கும் சிறந்த முறையில் சேவை செய்ய தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிராந்திய மொழி அறிவை அவர்கள் பெறுவது அவசியம்” என இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இது குறித்து அனைத்து துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு வழக்கிலான அடிப்படை மொழி பயிற்சி சார்ந்த தொகுப்பை உருவாக்கும் படி இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், இதேபோன்று வடமாநிலங்களில் வேலை கிடைத்து, அங்குள்ள ரயில் நிலையங்களில் இப்படி ‘எனக்கு இந்தி தெரியாது’ எனச் சொல்லி பணியாற்ற முடியாது. ஆங்கில மொழி அறிவு இருக்கும் என்பதால், முதல் ஓரிரு மாதங்கள் அதை வைத்துக்கொண்டு ஓட்டிவிடும் தமிழர்கள், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியைக் கற்றுக்கொண்டு, தங்களது பணியில் கவனமாக இருக்கின்றனர். ஆனால், இங்கு வரும் வடமாநிலத்தவர்களிடையே அந்த எண்ணம் இருப்பதில்லை.

தேவை என்றால் நீ இந்தி கற்றுக்கொள்’ என்ற மனோபாவத்திலேயே இருக்கும் வடமாநிலத்தவர்கள், தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் இனியாவது தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!

Exit mobile version