Amazing Tamilnadu – Tamil News Updates

சிக்கன் Vs பருப்பு: அசைவத்தை பின்னுக்குத் தள்ளிய சைவம்… காரணம் இதுதான்!

வீடுகளில் சமைப்பதானாலும் சரி… அல்லது ஓட்டல்களில் சாப்பிடுவதனாலும் சரி… சைவ உணவை விட அசைவ உணவுக்குத்தான் செலவும் விலையும் அதிகம் என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது உண்மை இல்லை என்கிறது தரக்குறியீடுகளை வழங்கும் ரேட்டிங் நிறுவனமான CRISIL நடத்திய ஆய்வறிக்கை.

வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவகங்களில் மதிய நேரங்களில் வழங்கப்படும் “தாலி” எனப்படும் முழு சாப்பாடு முக்கியமான ஒன்று. இதில் பல வகையான காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்களும், சாதமும் வழங்கப்படும்.

ரொட்டி அரிசி விலை (Roti Rice Rate- RRR) அறிக்கையின்படி, ஒரு வெஜ் தாலியில் ( veg thali) ரொட்டி, வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு, சாதம், பருப்பு, தயிர் மற்றும் சாலட் ஆகியவை இடம்பெறும். மறுபுறம், ஒரு அசைவ தாலியில் ( Non-veg thali)வெஜ் தாலியில் உள்ள அதே அயிட்டங்களும்,பருப்புக்குப் பதிலாக பிராய்லர் சிக்கனும் இடம்பெறுகிறது.

இந்த நிலையில், கடந்த ஓராண்டில் சைவ தாலியின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், அசைவ தாலியின் விலை 13 சதவீதம் குறைந்துள்ளதாகவும் CRISIL வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சைவ தாலி விலை ரூ.28 ஆக இருந்த நிலையில், இதுவே கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.26.6 ஆக இருந்துள்ளது. அசைவ தாலியின் விலை இதே காலகட்டத்தில் ரூ.59.9 ல் இருந்து ரூ.52 ஆக குறைந்துள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை முறையே 20 சதவீதம் மற்றும் 35 சதவீதம் உயர்ந்ததே, வெஜ் தாலியின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அரிசி மற்றும் பருப்பு விலையும் முறையே 14 சதவீதம் மற்றும் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜனவரி 2023 உடன் ஒப்பிடும்போது, 2024 ஜனவரி மாதத்தில் சைவ தாலியின் விலை உயர்வுக்கு, உணவுப் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்தது முக்கிய காரணியாக உள்ளது . ஜனவரி 2023 ல், சில்லறை பணவீக்கம் 6.52 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 5.94 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023 டிசம்பரில், சில்லறை பணவீக்கம் 5.69 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 9.53 சதவீதமாகவும் இருந்த நிலையில், அதிக உற்பத்தி காரணமாக கறிக்கோழி விலை 26 சதவீதம் குறைந்ததால், அசைவ தாலிக்கு, விலை குறைந்தது. ஒரு அசைவ தாலியின் மொத்த விலையில் பிராய்லர் சிக்கனின் விலை 50 சதவீதம் ஆகும்.

மேலும் 2023 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில், சைவ – அசைவ ஆகிய இரண்டு தாலிகளின் விலையுமே முறையே 6 சதவிகிதம் மற்றும் 8 சதவிகிதம் குறைந்து காணப்பட்டதாக தெரிவிக்கும் அந்த அறிக்கை, வெங்காயம் மற்றும் தக்காளி விலைகள் முறையே 26 சதவீதம் மற்றும் 16 சதவீதம் சரிந்ததால் இந்த தளர்வு ஏற்பட்ட தாகவும், ஏற்றுமதி தடைகள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து அதிகரித்த புதிய தக்காளி வரத்தும் இதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறது.

மொத்தத்தில், கறிக்கோழிகளின் விலையில் மாதந்தோறும் 8-10 சதவீதம் குறைந்ததால், அசைவ தாலியின் விலை வேகமாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

Exit mobile version