சாதிய அடக்குமுறைகள் குறித்து எடுக்கப்படும் படங்கள் தான் தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட் ட்ரென்டாக உள்ளது. அந்த வரிசையில் இணைந்திருக்கிறது ‘சார்’ படம்.
ஊழல் மற்றும் மத தீவிரவாதத்தால் பீடிக்கப்பட்ட ஒரு சமூகத்தில், ஒரு ஆசிரியர் உண்மையிலேயே ஒரு மாற்றத்திற்கான ஊக்கியாக இருக்க முடியுமா? ‘கன்னிமாடம்’ படத்திற்குப் பிறகு போஸ் வெங்கட் இயக்கியுள்ள இந்த ‘சார்’ அதை முயற்சிக்கிறார்.
மாங்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் சரவணன், ‘சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டமக்களுக்கு கல்வி கொடுத்து முன்னேற்ற வேண்டும்’ என்ற லட்சியத்தில், தன் தந்தையில் வழியில் நடக்கிறார். அந்தப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நினைத்தும் அவரால் முடியவில்லை.
கிராமவாசிகளுக்கு ஒருமுறை கல்வியறிவு கிடைத்துவிட்டால், தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனக் கருதும் சமூக விரோதிகள் அதற்கு எதிராக நிற்கிறார்கள். இருப்பினும் அந்த லட்சியத்தை அவரது மகன் சிவஞானம் (விமல்) சாதித்தாரா? அதற்கான தடங்கல்களை எவ்வாறு முறியடித்தார் என்பதே ‘சார்’ படத்தின் கதை.
படத்தில் காதல் காட்சிகள், சண்டை, கோபம் என அனைத்து நிலைகளிலும் அசத்தியிருக்கிறார் விமல். பொன்னரசன் கதாபாத்திரத்தில் வரும் சரவணன், படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறார். படத்தின் வில்லனாக வரும் சிராஜ், எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நகைச்சுவை காட்சிகளில் நடிகர் சரவண ஷக்தி சிரிக்க வைக்கிறார். படத்தில் வ.ஐ.ச.ஜெயபாலன், சந்திரகுமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய பலமாக இனியன் ஜெ. ஹரீஷின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. மாங்கொல்லை கிராமத்தின் அழகை தனது கேமராவில் மிக அழகாக கடத்தியிருக்கிறார். படத் தொகுப்பில் ஶ்ரீஜித் சாரங் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கதாபாத்திரங்கள் ஒரு பரிமாணத்தை கொண்டவை. ஆனால் சித்துகுமாரின் அதிகப்படியான பின்னணி இசை தேவையில்லாமல் ஒவ்வொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.
மூன்று தலைமுறைகளாக ஆசிரியராக உள்ள குடும்பத்தைக் கதைக்களமாக வைத்து இயக்கி உள்ளார் போஸ் வெங்கட். அவரது இயக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் சாதி, மதம் குறித்த வசனங்களால் வலு சேர்த்திருக்கிறார் எழுத்தாளர் சுகுணா திவாகர். படத்தின் சிறப்பாக அண்ணா துரை வாத்தியாரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ஆனால் திரையில் விரியும் கடுமையான காட்சிகள் பார்வையாளனுக்கு கதையோட்டத்தை கடத்துவதைக் குறைக்கிறது. கதையை விவரிப்பதற்குப் பதிலாக கல்வியின் முக்கியத்துவம் குறித்து கொட்டப்படும் தகவல்களும், பிரசங்கங்களும், பழிவாங்கும் கிளைக் கதைகளும் படத்துக்கு வேகத்தடையாக உள்ளன. படத்தின் மற்ற பிரச்னைகளுடன் ஒப்பிடுகையில் அது சொல்லும் செய்திக்கும் அதன் கதைக்கும் இடையே உள்ள முரண்பாடுதான் உறுத்துலாக உள்ளது.
ஆனாலும், மாங்கொல்லை கிராமத்தின் நிலை, சாமி என்ற பெயரில் அரங்கேறும் மோசடிகள், ஆசிரியராக வரும் பொன்னரசனுக்கு நேரும் வீழ்ச்சி, சமூக கொடுமைகள், அதன்பின்னால் உள்ள அரசியல் ஆகியவற்றைப் பேசிய விதத்தில் கவனிக்க வைக்கிறார் ‘சார்’.
சில குறைகள் இருந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் இந்த ‘சார்’ ஐ பாராட்டலாம்.