Amazing Tamilnadu – Tamil News Updates

இந்தியில் எல்ஐசி இணையதளம்… எதிர்ப்புக்குப் பின்னர் மாற்றம்!

த்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் நல்ல இலாபம் கொழிக்கக்கூடியவற்றில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் எனப்படும் எல்ஐசி ( Life Insurance Corporation – LIC) நிறுவனமும் ஒன்றாகும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இதன் இணையதளத்துக்குச் செல்ல, கூகுளில் LIC என டைப் செய்தாலே https://licindia.in என்ற லிங்க் வந்து, அதன் முகப்பு பக்கத்துக்குச் சென்றுவிடும். அவ்வாறு முகப்பு பக்கம் தோன்றும்போது அது இயல்பாகவே அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில், ஆங்கிலத்தில் தான் இருக்கும். அந்த முகப்பு பக்கத்தில் தான், எல்ஐசி-யின் சேவைகள், பிரீமியம் கட்டுவது தொடர்பான விவரங்கள் உள்பட பலவகையான தகவல்களைத் தெரிந்துகொள்வது, பணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு இணைப்பு பக்கங்களுக்குச் செல்வதற்கான வழிகாட்டல்கள் இடம்பெற்றிருக்கும்.

அதன் வலது மூலையில், மேல் பக்கம் இந்தி, மராத்தி மொழிக்கு மாற்றிக் கொள்வதற்கான தேர்வு வாய்ப்பும் இடம்பெற்றிருக்கும்.

இந்திக்கு மாறியதால் எதிர்ப்பு

இந்த நிலையில் தான், எல்ஐசி இணையதளம் Default ஆகவே இன்று இந்திக்கு மாறியதாக சர்ச்சை வெடித்து, இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காரசாரமாக கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்தி மொழியில் எல்ஐசி பக்கம் தோன்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து, ” நிர்மலாசீதாராமன் மேடம், எல்ஐசி இணையதளம் ஏன் இந்தியில் உள்ளது? இந்தி பேசாத இந்தியர்களை ஏன் அவமதிக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதே சமயம், பாஜக-வுக்கு ஆதரவானவர்கள், அப்படி இந்தியில் இல்லை என மறுத்தனர். தமிழக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ” இந்தி மொழியை தேர்வு செய்தால் இந்தி வராமல் அரபி மொழியா வரும்? தொடர்ந்து தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டார்.

ஆனால், முகப்பு பக்கமே இந்தியில் தான் தோன்றுவதாகவும், மொழித் தேர்வைக் குறிப்பிடும் வார்த்தையே இந்தியில் இருக்கும்போது அதனைத் தேர்வு செய்ய விரும்புவர்கள் எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் விதமான வீடியோவையும், ஸ்க்ரீன் ஷாட்களையும் பலரும் பதிவிட்டனர்.

தலைவர்கள் கண்டனம்

இந்த நிலையில், இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற் கு கண்டனம் தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், ” LIC-யின் இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தை இந்தி திணிப்புக்கு ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்வதற்கான விருப்ப பட்டனை கூட இந்தி மொழியிலேயே அமைத்திருக்கிறது. இந்த செயல் இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு என்பதை தவிர வேறில்லை. அனைத்து இந்தியர்களின் பங்களிப்புடன் தான் எல்ஐசி வளர்ந்தது. அதன் பெரும்பான்மை பங்களிப்பாளர்களுக்கு எப்படி துரோகம் இழைக்கலாம்? இந்த இந்தி மொழி கொடுங்கோன்மையை ஒன்றிய அரசு உடனே நிறுத்தவேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

பாஜக தலைவரே எதிர்ப்பு

இந்த நிலையில், விஷயம் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” எல்ஐசி இந்தியா, இந்தியில் இருக்கும் அதன் இணையதளத்தை தற்போதைய வடிவத்திலிருந்து மாற்ற வேண்டும். இந்தி படிக்கத் தெரியாதவர்களால் ஆங்கிலத்தில் மாற்ற முடியாது. எனவே முகப்பில் ஆங்கிலம் இருக்கலாம் மற்றும் இந்தி பயன்படுத்த விரும்புவோர் அதைத் தேர்ந்தெடுக்கலாம்” எனப் பதிவிட்டிருந்தார்.

ஆங்கிலத்துக்கு மாறியது

இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கண்டனங்கள் மற்றும் அழுத்தங்களைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 3.30 மணி வரை Default ஆக இந்தியில் வந்த எல்ஐசி-யின் முகப்பு பக்கம் 3.40 மணிக்கு மேல் ஆங்கிலத்துக்கு மாறியது.

முன்னதாக இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்றும், இதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எல்.ஐ.சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version