MLM மோசடி: உஷார்… இப்படியெல்லாமா ஏமாத்துறாங்க?
அதென்னவோ தெரியவில்லை… நிதி மோசடிக்கும் கோவைக்கும் அப்படி ஒரு ராசி. ஈமு கோழி வளர்ப்பு மோசடி தொடங்கி விதவிதமாக நடக்கும் நிதி சார்ந்த மோசடிகளில் பெரும்பாலும் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைக் குறிவைத்தே அரங்கேறுகின்றன. இதில் லேட்டஸ்ட், ‘யூ டியூபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும்’ என்ற பெயரில் MLM எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையை அடிப்படையாகக் கொண்டு, நூதன மோசடி நடைபெறுவதாக ‘மைவி3 ஆட்ஸ்’ ( My V3 ads) என்ற நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு.
இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக அதில் முதலீடு செய்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கோவை, நீலாம்பூர் எல்.என்.டி பைபாஸ் பகுதியில் நேற்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனம், தன்னிடம் முதலீடு செய்துள்ள மக்களுக்கு ஒரு வாட்சப் மெசேஜ் அனுப்பி அதில், ‘நீங்கள் நிறுவனத்துக்கு ஆதரவான பேரணிக்கு வரவில்லை என்றால், உங்கள் வருமானம் போய்விடும்’ என்று கூறி வரவழைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் மென்மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’ என்ற போர்வையில் நடைபெறும் இத்தகைய ‘சதுரங்க வேட்டை’ பட பாணியிலான மோசடிகள் எப்படி அரங்கேறுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்…
MLM திட்டங்களும் எச்சரிக்கையும்
‘பிரமீட் ஸ்கீம்’ ( pyramid scheme) என்ற பணத்தை பெருக்குவதற்கான எளிமையான வழி என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளோடு, மக்களை முதலீடு செய்ய வைக்கும் ஒரு மோசடி திட்டம்தான் இத்தகைய MLM திட்டங்கள் என எச்சரிக்கிறார்கள் நிதி பிசினஸ் தொடர்பான நிபுணர்கள். இத்திட்டங்களை செயல்படுத்தும் நேர்மையான நிறுவனங்களும் இருக்கின்றன. என்றாலும், இந்த எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அந்த தொழில் சார்ந்த விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்ளாமல், விழிப்புணர்வு இல்லாமல் ஈடுபடும்போது மோசடிக்கு ஆளாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சரி… அதென்ன ‘பிரமிட் ஸ்கீம்’… இதில் மக்கள் ஏமாறுவது எப்படி?
புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது லாபம் கிடைக்கும் என்று சொல்லும் நிறுவனங்கள் முதலில் சேரும் நபர்களுக்கு குறிப்பிட்ட தொகை அல்லது பரிசுப்பொருள்களை அளித்து மற்றவர்களையும் இந்தத் திட்டத்தில் ஈர்த்து முதலீடு செய்ய வைக்கிறார்கள். மேலும், குறிப்பிட்ட பொருள்களை விற்பதாகவும் கூறி மக்களை இந்த திட்டத்துக்குள் இழுக்கின்றனர். மேற்கூறிய ‘மைவி3 ஆட்ஸ்’ நிறுவனம் கூட ஆயுர்வேத பொருட்களையும் மாத்திரைகளையும் விற்பனை செய்வதால் தமிழ்நாடு உட்பட மற்ற மாநில மக்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என்றும் அறியமுடிகிறது. முதலீட்டை விட அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்வதாலும், பரிசுப் பொருள்கள் கொடுப்பதாலும் எளிதில் மக்கள் இந்த வகையான திட்டங்களை நம்பி பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
இதில் உண்மையான தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்பனை செய்வதை விட புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த அமைப்பு, பணத்தை கொண்டு வர புதிய ஆட்களை நம்பியுள்ளது. பின்னர் இது பிரமிடில் மேலடுக்கில் உள்ளவர்களுக்கு கமிஷன்களை செலுத்த பயன்படுகிறது. இறுதியில், பிரமிடு இடிந்து விழுந்து, கீழே இருப்பவர்களுக்கு பண இழப்பு ஏற்படுகிறது.
மிகைப்படுத்தப்பட்ட வருமான ஆசை
MLM நிறுவனங்கள், பெரும்பாலும் தனிநபர்கள் வணிகத்தில் சேருவதன் மூலமும், தீவிரமாகப் பங்கேற்பதன் மூலமும் கணிசமான வருமானத்தை அடைய முடியும் என்ற கருத்தை ஊக்குவிக்கின்றன. இருப்பினும், உண்மையில், பங்கேற்பாளர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டுகின்றனர். இத்தகைய MLM நிறுவனங்கள், பணத்தையும் நேரத்தையும் முதலீடு செய்ய மக்களை தவறாக வழிநடத்தி, மிகையான வருமான ஆசையைத் தூண்டிவிடும்.
பொருட்களை வாங்க அழுத்தம்
MLM-கள், தங்களது பங்கேற்பாளர்களை பெரிய அளவிலான சரக்கு அல்லது தயாரிப்புக் கருவிகளை வாங்குவதற்கு அழுத்தம் கொடுக்கலாம். இது அவர்களின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், ஆட்சேர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகப்படியான சரக்கு ஏற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதனால், இதில் சேர்பவர்களுக்கு விற்கப்படாத பொருட்கள் மற்றும் நிதி இழப்புகள் ஏற்படுகின்றன.
மறைமுக செலவுகள் மற்றும் கட்டணங்கள்
MLM-கள் வணிகத்தில் சேர்வது மற்றும் அதனை பராமரிப்பது தொடர்பான அனைத்து செலவுகளையும் முழுமையாக வெளிப்படுத்தாது. பங்கேற்பாளர்கள் ஸ்டார்ட்டர் கிட்கள், பயிற்சிப் பொருட்கள் மற்றும் பிற கட்டணங்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கலாம். இது எதிர்பாராத நிதிச் சுமைகளுக்கு வழிவகுக்கும்.
தயாரிப்பு விற்பனையை விட ஆட்சேர்ப்பில் கவனம் செலுத்துதல்
முறையான வணிகங்களில், தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்பதன் மூலம் முதன்மையான வருவாய் கிடைக்கிறது. ஆனால் சில MLM கள், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்த சொல்லும். மேலும், உண்மையான தயாரிப்பு விற்பனையை விட ஆட்சேர்ப்புக்கு அதிகமாக கமிஷன்கள் தருவதாக ஆசை காட்டப்படும்.
தொடர்பு விவரங்கள் உள்ளதா?
மொத்தத்தில் ஒரு MLM நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன்னர், அதன் வணிக மாதிரி மற்றும் தற்போதைய மற்றும் முன்னாள் பங்கேற்பாளர்களின் அனுபவங்களை முழுமையாக ஆய்வு செய்வது முக்கியம். மேலும், MLM களுடன் தொடர்புடைய அபாயங்களைப் புரிந்துகொள்வது அவசியம். மேலும், அந்த நிறுவனம் எங்கு செயல்படுகிறது, அதன் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது. ஏதாவது பிரச்னை என்றால் யாருக்கு அழைத்து பேசுவது, தொடர்பு எண் என்ன, நிறுவனத்துக்கு என தனியே இணையதளம் இருக்கிறதா, அங்கு நிறுவனம் சார்ந்த அனைத்து விவரங்களும் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்கிற பல கோணங்களில் ஆராய்ந்து அந்த நிறுவனம் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
முடிவாக ஒன்று… மோசடி நிறுவனங்களுக்கு மூலதனமாக அமைவது உழைக்காமல், வெகு சீக்கிரம் அதிகம் சம்பாதித்து செட்டிலாகிவிட வேண்டும் என நினைப்பவர்களின் பேராசைதான். எனவே, அத்தகைய நிறுவனங்களின் மோசடி வலையில் சிக்காமல் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்!