உணவு டெலிவரி ஊழியர்களுக்கு நல வாரியம்… அரசாணையால் கிடைக்கப்போகும் பயன்கள் என்ன?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் அறிவித்தபடி ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விகி போன்ற இணையம் சார்ந்த ‘கிக்’ (Gig)தொழிலாளர்களுக்கு ‘Tamil Nadu Platform Based Gig Workers Welfare Board’ எனும் புதிய நலவாரியம் அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை ‘கிக்’ தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தொடங்கி, மாநிலத்தின் மற்ற எல்லா பெரிய நகரங்களிலும், ஓலா, உபெர், ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் உணவு உள்ளிட்ட பொருட்களை விரைவாக அவர்களிடத்தில் கொண்டு செல்வதற்காக, இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை அடிக்கடி காணலாம்.

கேள்விக்குறியாக இருந்த பணி பாதுகாப்பு

நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் இந்த தொழிலாளர்களுக்கு 8 மணி நேர ஷிப்ட் என்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. இரவு பகல் பார்க்காமல் ஆர்டர் வரும்போதெல்லாம் டெலிவரி செய்தால் தான் ஓரளவுக்கு சம்பாதித்து, தானும் வாழ்க்கையை ஓட்டி, உறவுகளுக்கும் ஏதாவது பொருளாதார உதவி செய்ய முடியும். இந்த தொழிலை முழு நேரமாக பார்ப்பவர்களின் நிலைமை இதுவென்றால், படித்துக் கொண்டே பார்ட் டைமாகவும், வேறு இடத்தில் வேலை செய்தாலும் கூடுதல் வருமானத்துக்காகவும் இந்த வேலையை பார்ப்பவர்களும் உண்டு.

அதே சமயம், இந்த தொழிலாளர்களுக்கு எவ்வித பணி பாதுகாப்போ அல்லது குறைந்தபட்ச வருமான உத்தரவாதமோ கிடையாது. குறிப்பிட்ட டார்கெட்டை பூர்த்தி செய்யவில்லை என்றால் அல்லது தாமதமான டெலிவரி போன்ற காரணங்களால் வேலையை விட்டு தூக்குவது அல்லது கொடுக்கும் கொஞ்ச நஞ்ச கமிஷனிலும் கை வைப்பது என இந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் மிக அதிகம். இவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்க தனி வாரியம் எதுவும் இல்லாததால், அவர்களது பிரச்னைகளை யாரிடம் முறையிடுவது என திண்டாடி வந்தனர்.

தீர்வு இல்லாத போராட்டம்

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே மற்ற தொழிற்சாலை தொழிலாளர்களைப் போலவே தங்களுக்கும் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் சலுகைகள் கிடைப்பதை உறுதிசெய்ய இந்த ‘கிக்’ தொழிலாளர்கள் போராடி வந்தனர். ஊதிய விஷயத்தில் வேலை செய்யும் நிறுவனங்களால் மிகவும் அநீதி இழைக்கப்படும் சமயங்களில், தொடர்ந்து பொறுக்க முடியாமல் , தன்னெழுச்சியான போராட்டங்களையும், வேலைநிறுத்தப் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

அது போன்ற தருணங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகள் அல்லது பிரதிநிதிகள், தற்காலிகமாக சில தீர்வுகளை வழங்குவதை ஏற்று, அவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றது உண்டு. ஆனால், வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், சில மாதங்களிலேயே ‘கிக்’ தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதும் உண்டு.

பிளாக் செய்யப்படும் ஐடி

“ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 மணி நேரமாவது உழைத்தால் தான் ஓரளவுக்கு வாழ்க்கையை ஓட்ட முடியும். அதே சமயம் நீண்ட நேரம் பைக்கில் பயணம் செய்வதால், கண்களில் அலர்ஜி, தோலில் எரிச்சல் மற்றும் முதுகுவலி போன்ற பல உடல்நலப் பிரச்னைகளை இவர்கள் அனுபவிக்கிறார்கள். மேலும், நிறுவனம் அடிக்கடி ஸ்லாட்டுகளையும் விதிகளையும் மாற்றிக்கொண்டே இருப்பதால், அது குறித்து புகார் அளித்தாலும், நிறுவனங்கள் தரப்பிலிருந்து அதற்கு உரிய பதிலோ அல்லது தீர்வோ கிடைப்பதில்லை. மீறி வலியுறுத்திக் கேட்டால், ஊழியர்களின் ஐடி (ID) பிளாக் செய்யப்படுகிறது

மேலும், உடல் நலம் சரியில்லை அல்லது அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டியதுள்ளது என லாக் இன் செய்யாமல் 2 நாட்கள் விடுப்பு எடுத்தாலே, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஐடி பிளாக் செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கான ஃபீல்டு மேனஜர்களையும் தொடர்பு கொள்ள முடியாததால், நாங்கள் மிகவும் துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளாக நேரிடுகிறது. எனவே மற்ற ஓட்டல் தொழிலாளர்களுக்கு எப்படி தொழிலாளர் சட்டம் பொருந்துகிறதோ அதே போன்று இவர்களையும் அச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அவர்களது குறைகளை முறையிட்டு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இவர்கள் சார்பில் தொழிற்சங்கங்கள் கோரி வந்தன.

முதலமைச்சர் அளித்த வாக்குறுதி

அவர்களது இந்த கோரிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையின்போது, கிக் (Gig) “தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும்” என அறிவித்திருந்தார்.

பிறப்பிக்கப்பட்ட அரசாணை

அதன்படி, உணவு டெலிவரி உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா ‘கிக்’ தொழிலாளர்களுக்காக புதிய நல வாரியம் அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் (Gig) தொழிலாளர்கள், இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி, இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, விபத்துக் காப்புறுதி, சுகாதாரக் காப்புறுதி போன்றவை கிடைக்கும். அவர்களது குறைகளை வாரியம் காது கொடுத்துக் கேட்டு, அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் என நம்பலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of local domestic helper. Essa frase resume a importância da agência nacional de aviação civil no nosso país. Ross & kühne gmbh.