சென்னை மக்களுக்கு மற்றொரு மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது 2023 டிசம்பர் 4. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை 2015 டிசம்பர் நிகழ்வை நினைவுபடுத்தினாலும், புயலுக்கு சில தினங்கள் முன்னதாகவே தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மற்றொரு 2015 நிகழ்வுக்குள் சிக்காமல் சென்னை மக்கள் தப்பிவிட்டனர்.
2015 ல் பெய்த மழையை விட அதிகமாக பெய்தும் சென்னை தப்பியது எப்படி..? இரு நிகழ்வுகளுக்குமான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்…
வெள்ளம் சூழ்ந்த சாலைகள், வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதைகள், வெள்ள நீரில் தத்தளித்த குடியிருப்புகள், வயதானவர்களை மீட்க படகுகள், உணவுக்கு தவித்தவர்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று உணவு பொட்டலம் போட்டது, ஆங்காங்கே தன்னார்வலர்களும் சினிமா பிரபலங்களும் தாங்களாகவே முன்வந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியது… என சென்னை மக்களுக்கு கடந்த 2015 வெள்ளத்தின் நினைவுகள் மறக்க முடியாத கலங்க வைக்கக் கூடியது என்றே சொல்லலாம்.
இந்த முறையும் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால், கடந்த டிசம்பர் 4 அன்று பெய்த பெருமழை சென்னை மக்களை மிகுந்த அச்சத்துக்குள்ளாக்கியது. மக்களின் அந்த அச்சத்துக்கும் காரணமில்லாமல் இல்லை. ஏனெனில் 2015 ல் பெய்த கனமழையுடன் ஒப்பிடுகையில், இந்த முறை பெய்தது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத மழை என்று சொல்கிறார்கள் அதிகாரிகளும் நிபுணர்களும்…
2015 Vs 2023 என்ன வித்தியாசம்?
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD)தகவலின்படி, 24 மணி நேர கணக்குபடி மழைப் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், 2015 ல் பெறப்பட்ட மழை இந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது என்றாலும், மிக்ஜாம் புயலானது விரைவாக கடந்து செல்லாமல், இரண்டு நாட்கள் நின்று மழை பெய்த காரணத்தால், சென்னையில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. எனவே 2023 வெள்ள விஷயத்தில், டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை 48 மணிநேர கணக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.
சமீபத்திய வெள்ளத்தில், டிசம்பர் 3 ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி இரவு 8.30 மணி வரை அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கான மழைப்பொழிவையும் சேர்த்து 48 மணி நேரத்துக்கான மழைப்பொழிவு தரவுகளைப் பார்த்தால், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடிவதோடு, 2015-ம் ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை, நுங்கம்பாக்கத்தில் 47 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 42 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோன்று தாம்பரத்தில் 41 செ.மீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 37 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. டிசம்பர் 3 முதல் 5 வரை ஆவடியில் 56 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இப்படி 2015 ஆம் ஆண்டை விட 2023 ல் அதிக அளவு மழை பெய்த போதிலும், மக்களுக்கான பாதிப்பும், சேதமும் 2015 ஆம் ஆண்டை விட இந்த முறை மிக குறைவாகவே காணப்பட்டது. இத்தகைய ஒரு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, உடனடி நிவாரணப் பணிகள் மூலமாக உயிரிழப்புகளும், மற்ற பிரச்னைகளும் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் 2015 ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது அதைவிட அதிகமான மழை பெய்திருந்தும் 7 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இதுவும் ஏற்பட்டிருக்கக்கூடாது. ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு வடசென்னையை பொறுத்தளவில் மண்டலம் 3,4,5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை மழை நீர் வடிகால் அமைப்பு பணிக்காக சுமார் ரூ.2,450 கோடி ரூபாய் செலவில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, சென்னையினுடைய சாலை நீளம் சுமார் 5,500 கிலோ மீட்டராக இருந்தாலும், இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சென்னையைச் சுற்றியுள்ள பழைய கால்வாய்களில் தண்ணீர் அதிக கொள்ளளவு வெளியேறும் வகையில் அகலப்படுத்தியும், புதிய கால்வாய்களை ஏற்படுத்திய வகையிலும் சுமார் 1,450 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம்… சென்னை தப்பியது எப்படி?
மழை நீர் வடிகால்கள் நல்ல முறையில் பணி செய்தாலும், அவை இறுதியாக கடலில் வடியக்கூடிய அடையாறு மற்றும் கூவம் நதிகளின் முகத் துவாரங்களில் புயலின் காரணமாக அலைகளின் அளவு அதிகமாக இருந்த காரணத்தினால், இந்த நதிகளில் வெள்ள நீர் மிக மெல்லமாகவே வடிந்தது. இருந்தாலும், அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ள நிவாரணப் பணிகளால் இச் சூழ்நிலையிலிருந்து பெருமழையின் தாக்கம் குறைக்கப்பட்டிருக்கிறது, வெள்ள நீரும் விரைவாக வடிந்து வந்து கொண்டிருக்கிறது.
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால், 2015-ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திட்டமிடப்படாமல், அடையாறு வரும்போது, 1 லட்சம் கன அடி அளவிற்கு பெருமளவு நீர் திடீரென திறந்து விடப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்புகொண்டு பேச முடியாத நிலை இருந்ததால், கடைசி வரை அதிகாரிகள் முடிவெடுக்க முடியாமல் தவித்து நிலைமை கைமீறிச் சென்றது. வெள்ளம் ஏற்பட்டதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயம் அது ஒரு செயற்கை வெள்ளம் . இந்த முறை ஏற்பட்டிருப்பது இயற்கையாக ஏற்பட்டிருக்கக் கூடிய வெள்ளம். அதையும், இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்த முறை புயலுக்கு முன்னர் முதலமைச்சரே களம் இறங்கி அதிகாரிகளை முடுக்கி விட்டார். அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, கடந்த நான்கு நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீர் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திறந்து விடப்பட்ட காரணத்தினால், இத்தகைய பெருமழையை, 2015 ல் மக்களுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பை போலல்லாமல் சமாளிக்க முடிந்திருக்கிறது. அதிகபட்சம் 8000 கன அடி அளவிற்கு மட்டுமே நீர் திறந்து விடப்பட்டது. இதனால், சென்னையில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம், அடையாறு நதியில் தடையின்றி சென்று கடலில் சேர முடிந்ததால் சென்னையும் சென்னை மக்களும் தப்பினர்!