Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

விஜயகாந்த்: ‘ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் ஒரே உணவு முறையை கொண்டு வந்தவர்!’

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் காலை காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விஜயகாந்த் மறைவையொட்டி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.இராமசாமி உள்ளிட்ட அதன் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். திரைப்பட தயாரிப்பாளர்களை “முதலாளி” என அன்போடு அழைத்தவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர்.

தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர்.

படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து

அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (29.12. 2023) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்”என்று கூறப்பட்டுள்ளது.

‘ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் ஒரே உணவு ‘

முன்னதாக, விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் இன்று காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், “விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (டிச.28) தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

Exit mobile version