‘மீனையும் தயிரையும் ஒன்றாகச் சாப்பிடக் கூடாது’ எனப் பலர் சொல்லிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஏன் அந்த இரண்டு உணவையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது? அப்படி எடுத்துக் கொண்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை ‘மீனையும் தயிரையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது’ என்று சொன்னவர்கள் கூடச் சொல்லியிருக்க மாட்டார்கள்.
பலருக்கும் இந்த இரண்டு உணவையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது என்று தெரியும். ஆனால் அதற்கான காரணம் தெரியாது. மீனையும் தயிரையும் சேர்த்து சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து சித்த மருத்துவர் கு. சிவராமன், “மீன் மிகச் சிறந்த உணவு. மீன் செரிக்கக் குறைந்த அளவிலான நேரத்தையே எடுத்துக்கொள்ளும். ஆனால் தயிருக்கு மந்தப்படுத்தக் கூடிய குணம் இருக்கிறது. அதனால் தயிரையும் மீனையும் ஒன்றாகச் சாப்பிட்டால், அது ஜீரணத்தை மந்தப்படுத்தும்.
அதே நேரத்தில் கிராமப் புறங்களில் தயிர்ச் சோறுக்கு கருவாடு வைத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாகவே இருக்கிறது. ஏன் இந்த மாதிரியான முரண்பாடுகள் இருக்கின்றன என்று தெரியவில்லை. மீனையும் தயிரையும் ஒன்றாகச் சாப்பிடுவதனால் அது விஷமாக மாறாது. மந்த தன்மையை மட்டுமே ஏற்படுத்தும். அதனால் மீனையும் தயிரையும் ஒன்றாகச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ சூடான உணவை எடுத்துக்கொண்ட உடனேயே குளிர்ச்சியான உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. உதாரணமாகக் குளிர்ச்சி பொருளான கற்றாழை எடுத்துக்கொண்டால், உடனே அன்னாசி பழம், பப்பாளி பழம் போன்றவற்றை உண்ணக்கூடாது. எதிரெதிராக இருக்கும் வீரியங்களை தவிர்க்கவேண்டும். அதுபோலத்தான் மீனும் தயிரும். அவை இரண்டும் எதிரெதிர் வீரியங்கள் கொண்டவை. அதனால்தான் அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது என்கிறோம்” என ஆயுர்வேத மருத்துவர் ரைச்சல் ரெபேகா தெரிவித்துள்ளார்.