Amazing Tamilnadu – Tamil News Updates

தலைவன் ரோகித் இருக்க பயமேன்..? – களத்தில் வித்தை காட்டும் ‘ஹிட் மேன்…’

13 ஆவது ஐசிசி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 4வது முறையாக இறுதிப்போட்டி முன்னேறியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் அடித்த அடியை பார்த்தபோது, அப்போதே 400 ரன்களை தொட்டுவிட்டதைப் போன்றதொரு உற்சாகம் ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது. வெறும் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களை பறக்க விட்ட ரோஹித், 47 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அடுத்த வந்த விராட் கோலியும் சச்சினின் 49 சதம் என்ற வரலாற்றுச் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், சச்சினுக்கு களத்திலேயே மரியாதையும் செய்து அரங்கத்தையே அதிரவைத்தார்.

398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களை முகமது சமி காலி செய்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் மிட்சேல் ஜோடி, 140 கோடி இந்தியர்களின் ரத்த ஓட்டத்தை எகிற வைத்து, இந்திய அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பறக்க விட்டது. மிகவும் அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா தனது மொத்த வித்தையையும் இறக்கியும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.

அடுத்து டிரிங்ஸ் இடைவேளையின்போது வீரர்களை அழைத்து ஒரு பக்கா ஸ்கெட்சை போட்டு, மீண்டும் முகமது ஷமியையே வரவைத்தார். ஃபீல்டு செட்டப்பை பலப்படுத்தி, கேப்டன் கேன் வில்லியன்சன் விக்கெட்டை தூக்கிய ஷமி, அடுத்து 2 ஆவது பந்தில் டாம் லதாமையும் பதம் பார்த்தார். ஒரு வழியாக ரசிகர்களை கண்ணீர் வர வைக்காத குறையாக பாடாய்படுத்திய நியூசிலாந்து அணியை, கட்டுக்குள் கொண்டு வந்தார் ரோகித் சர்மா. இறுதியில் ஷமியின் அசத்தலான பந்துவீச்சால், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியர்களுக்கு அமைதியான தூக்கத்தை கொடுத்தனர் நமது இந்திய அணி வீரர்கள்..

ரோகித் சர்மா எனும் மாஸ்டர்

இந்திய அணியை ஒரு போட்டியில் கூட தோற்க விடாமல் வெற்றி நடைபோட வைப்பதற்கான அனைத்து பெருமையும் நமது கேப்டன் ரோகித் சர்மாவையே சேரும். ஒரே ஒரு தோல்வி எல்லாவற்றையும் கெடுத்து விடும். நல்ல வேளையாக நேற்று நமக்கு அந்த வலியை நமது அணி கொடுக்கவில்லை. ஹிட்மேன் ரோகித் சர்மாவின் ‘பேட்டிங் மாற்றம் திட்டம்’ எல்லாமே இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்திருக்கிறது.

“முதல் 10 ஓவருக்குள் பெரிய ஸ்கோர் அடிக்க நான் அடித்தளம் போட்டுவிடுவேன். உன்னுடைய ரோல் (விராட்) நிதானமாக உன் விக்கெட்டை விடாமல் உன்னை சுற்றியே மற்ற வீரர்கள் இருப்பது மாதிரியும் ஆட வேண்டும். ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான்” நேற்றைய போட்டியில் கிங் கோலி சொன்ன விஷயம். இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள், தோல்வியையே சந்திக்காத இந்திய அணி… என எல்லாவற்றையும் வெளியே இருந்து பார்ப்பதற்கு இலகுவாகத் தெரியலாம். ஆனால், இவர்கள் அனைவரையும் ஒரு சேர ஒருங்கிணைத்து வண்டியை எங்கும் நிறுத்தாமல் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது சாதராண விஷயம் இல்லை..

தோனியைப் போலவே செயல்படும் ரோகித் சர்மா

ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் திறமைக்கு நேற்றைய போட்டியைக் கூட உதாரணமாக சொல்லலாம். ஜடேஜாவை 3 வெவ்வேறு இடங்களில் நிற்க வைத்து, 3 வெவ்வேறு பௌலர்களுக்கு விக்கெட் எடுத்துக் கொடுத்தார். பிலிப்ஸ்க்கு ஜடேஜாவை லாங் ஆஃப்பில் நிற்க வைத்தார், சாப்மேனுக்கு ஜடேஜாவை ஸ்கோயர் லெக்கில் நிற்க வைத்தார், மிட்சலுக்கு டீப் மிட் விக்கெட்டில் ஐடேஜாவை நிற்க வைத்தார்.

மேலும் கோலி- ரோகித் சண்டை, கடந்த 2019 ஆம் ஆண்டு உலககோப்பை தொடர் தோல்வியில் இருந்து வரும் செய்தியாகும். ஆனால் இப்போது விராட்டும் ரோஹித்தும் தரமான புரிதலுடன் இருக்கிறார்கள். அதை களத்திலும் அப்பட்டமாக வெளிக்காட்டி வருகிறார்கள்.

அதேபோல் ராகுல் டிஆர்எஸ்வேண்டாம் என்று சொல்வதாக இருக்கட்டும், எடுப்பதாக இருக்கட்டும், கேட்ச் பிடிப்பதாக இருக்கட்டும்… மெருகேறி இருக்கிறார்.கேப்டன் ரோகித் சர்மாவும் அவரின் ஆலோசனையை முழுவதுமாக எடுத்துக் கொள்கிறார். உலககோப்பை தொடருக்கு முன் ரோகித் சர்மா, களத்தில் வீரர்கள் செய்யும் தவறுகளை அவர்களிடம் கடிந்து கொள்வார்.

அது பெரும் விமர்சனம் ஆகி வந்தது. ஆனால் இப்பொழுது அணி வீரர்கள் தவறு செய்வதையே அதிகம் நிறுத்திவிட்டனர். இதுவே போதும். இதே ஃபார்மில் இந்திய அணி இறுதிப்போட்டியில் வென்றால், நிச்சயம் 3 ஆவது முறையாக உலகக்கோப்பையைத் தட்டிச் செல்லும் என்பதிலும், அதற்கு மிகப்பெரிய தூணாக கேப்டன் ரோகித் சர்மா இருப்பார் என்பதிலும் எந்த ஒரு சந்தேகமும் இல்லை..!

Exit mobile version