‘கோவிட்’ வந்தபோது உலகம் முழுவதுமே பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பாதிக்கப்பட்டதுதான். ஆனால் வீழ்ச்சியடையவில்லை. விரைவில் மீண்டெழுந்து விட்டது.
அதற்குப் பிறகுதான், ‘2030-க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும்’ என தமிழ்நாடு அரசு இலக்கு வைத்து செயல்பட ஆரம்பித்தது. ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை எதைக் கொண்டு அளவிடுகிறார்கள்? ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உற்பத்தியாகும் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பண மதிப்பை, மொத்த தேசிய உற்பத்தி (GNP) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்று சொல்கிறார்கள்.
சென்ற ஆண்டில் ஜிடிபி என்ன அளவில் இருந்ததோ அதைக் காட்டிலும் அதிகமாக இந்த ஆண்டு இருந்தால், அதை வைத்து பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வோம்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு ஆங்கில ஊடகத்திற்கு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அளித்த பேட்டியில், “தமிழ்நாடு ‘கொரோனா’ நேரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால் அதன் பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்யத்திற்குச் சென்றுவிடவில்லை. தற்போது மீண்டெழுந்து வந்து கடந்த இரண்டு வருடங்களாக 8 சதவீதத்தில் நிலையாக நிற்கிறது. ஏழு வருடத்தில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை நாம் எட்டி விட்டால் போதும், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டி விடலாம்” என்று கூறுகிறார்.
ஒன்றிய அரசு நமக்குத் தர வேண்டிய பங்கை முறையாகத் தருவதில் சில சிக்கல்கள் இருந்தாலும், தமிழ்நாடு எப்படி பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய முடியும் என்பது குறித்து அவர் அந்தப் பேட்டியில் விரிவாகச் சொல்லியிருந்தார்.
தோல் அல்லாத காலணிகள் மற்றும் ஜவுளி போன்ற தொழில்களில் கவனம் செலுத்த தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும். ஏற்றுமதி அதிகரிக்கும் அன்னியச் செலவாணி கிடைக்கும். அந்தத் தொழிலை பின்தங்கிய பகுதியான பெரம்பலூரில் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்களாம். மூன்றாயிரத்தில் இருந்து நான்காயிரம் பேர் வரையில் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் ஜெயரஞ்சன்.
விருதுநகரில் ஜவுளித் தொழில், தூத்துக்குடியில் அறைகலன், டெல்டா பகுதியில் உணவுத் தொழிற்சாலைகள், மதுரை , கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் என்று ஏராளமான திட்டங்களை அந்தப் பேட்டியில் விவரித்துச் சொல்லி இருக்கிறார் ஜெயரஞ்சன். மொத்தத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏறு முகத்தில் கப்பலைப் போன்ற நிதானத்துடன், ராக்கெட்டைப் போன்ற வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது.