Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்… இனி ஆண்டுக்கு 150 நாட்கள் இதே நிலைதான்… காரணம் என்ன?

ன்னும் மார்ச் மாதம் கூட தொடங்கவில்லை. அதற்குள் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், ‘இப்பவே இப்படி என்றால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எப்படித்தான் சமாளிக்கப்போகிறோமா..?’ என்ற கவலை, மக்களிடையே எழத் தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்திலிருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த வாரம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் பதிவாகி இருந்தது. கடந்த 5 நாட்களாக கொங்கு மண்டலத்தில் 100 முதல் 102 டிகிரி வரை வெயில் தாக்கம் இருந்தது.

இந்த ஆண்டு அதிக வெப்பம்

இந்த நிலையில் வெயில் தாக்கம் இந்த ஆண்டு, வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எல்நினோ மாற்றம் காரணமாக, இந்தியாவில் வெயில், கடந்த ஆண்டுகளை விட அதிகரிக்கும் என அந்த மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் வெயில் தாக்கம் வரலாறு காணாத வகையில் உச்சத்துக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. கடல் காற்றின் வருகையைப் பொறுத்து சென்னையில் வெயில் தாக்கம் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் கடுமையான புழுக்கம் காணப்படும் என்றும், இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாகும் நாட்களில் வெப்ப அலை காற்றும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை ஆய்வு

இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, அடுத்து வரும் 3 மாதங்களுக்கும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கமும் வெப்பமும் கடுமையாக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அந்த ஆய்வின்படி, 2014 ஆம் ஆண்டு முதல் 39 மாவட்டங்களில் வெப்பத்தால் ஏற்படும் அசௌகரியம் தற்போது சராசரியாக 41.5% அதிகரித்திருப்பதாகவும், இந்த போக்கு இப்போது தொடங்கி, வருகிற 2050 ஆண்டு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுகிறது.

அதாவது, இப்போது தொடங்கி 2050 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 150 நாட்களுக்கு தமிழ்நாடு கடுமையான வெப்ப நிலையை எதிர்கொள்ளும். 1985 மற்றும் 2014 க்கு இடையில், தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் 107 நாட்கள் கடும் வெயிலின் அசௌகரியத்தை அனுபவித்தது. இனி, இது 2050 ஆம் ஆண்டு வரை சராசரியாக 150 நாட்களாக இருக்கும் என அந்த ஆய்வு கூறுகிறது. அசௌகரியமான நாட்கள் என்பது சராசரி வெப்பநிலை 29°C க்கும் அதிகமாகவும், ஈரப்பதம் 30% க்கும் குறைவாகவும் இருக்கும் நாட்களைக் குறிக்கும். மனிதனுக்கு உகந்த ஈரப்பதம் 30%-60% ஆகும்.

கடுமையான வறட்சி

இதனால், தமிழ்நாட்டில் வரவிருக்கிற நாட்களில் கடுமையான வறட்சி நிலவும். 2014 முதல், வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு, மாவட்டங்களில் வறட்சி நாட்கள் 9.9% அதிகரித்து காணப்பட்ட நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 78 வறண்ட நாட்கள் மழை இல்லாமல் இருக்கும் என அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அறிவுரை

கடுமையான வெப்பம் உடலை நீர்ச்சத்தின்றி வறண்டு போக வைத்து, மயக்கமடைய வைத்துவிடும். ஒரு சிலர் வெப்பம் தாங்காமல் ‘சன் ஸ்ட்ரோக்’ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள்கூட இருக்கிறது. எனவே சிறுவர்கள், வயதானவர்கள், அதிக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், போதுமான நீரை கட்டாயம் பருக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Exit mobile version