சச்சினின் சாதனையை இனி எந்த ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது என மார்தட்டிக் கொண்ட காலம் வேறு. ஆனால் சச்சினோ, ‘எனது சாதனைகளை நிச்சயம் யாரோ ஒருவர் முறியடிப்பார்’ என தன்னடக்கமாகவே கூறி வந்தார். ஆனால் அந்த சாதனைகளை, அவரையே குருவாக நினைத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய விராட் கோலி என்ற பையன் முறியடிப்பார் என சச்சின் நினைத்திருக்க மாட்டார்.
16 வயதில் விராட் கோலி, 2006-ம் ஆண்டு கர்நாடக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். மறுநாள் ஆட்டத்துக்கு முன்பாக அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டிற்கு சென்ற விராட் கோலிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலியின் தந்தை பிரேமுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வந்து சேர்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. விராட் கோலி தந்தையின் உயிர், அவரது கண் முன்னே பிரிந்து சென்றது. ஆனாலும் கிரிகெட் மீதான வெறியால் தந்தையின் மரணத்துக்கு மறுநாள் ரஞ்சிக்கோப்பையில் விளையாடிய கோலி, அந்த ஆட்டத்தில் 90 ரன்கள் எடுத்தார்.
தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி, மற்ற ஆசைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, தந்தையின் கனவை நனவாக்க வேண்டும் என்று முழு ஆற்றலுடன் வெறித்தனமாக பயிற்சி செய்து விளையாடினார் கோலி. இதனால் 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் அவரின் திறமையைப் பார்த்து கேப்டனாக அனுப்பி வைத்தது பிசிசிஐ.
விராட் கோலி தனது சிறப்பான கேப்டன்ஷிப்பும் இறுதிப்போட்டியில் அவர் அடித்த பொறுப்பான சதத்தாலும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல உதவினார். தொடர்ந்து வெளிப்பட்ட சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தேர்தெடுக்கப்பட்ட விராட் கோலி, அப்புறம் செய்த சம்பவங்களெல்லாம் உலகம் அறிந்ததே…
2009 ஆம் ஆண்டு, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த விராட் கோலி, நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சதம் அடித்து, ஒரு நாள் போட்டியில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
விராட் கோலியின் 50 சதங்களின் விவரம்:
இந்தியாவில் – 24 சதங்கள்
வெளிநாட்டு மண்ணில் – 26 சதங்கள்
சேஸிங்கில் 27 சதங்கள் அடித்து அதில் 4 போட்டிகள் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது இந்தியா. முதல் பேட்டிங்கில் 23 சதங்கள் அடித்த போட்டிகளில், 3 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த கிங் கோலி
சதத்தில் மட்டுமின்றி ஒரே உலகக்கோப்பையில் சச்சின் குவித்த ரன்களின் சாதனையையும் விராட் முந்தினார். 2003 உலகக்கோப்பை போட்டியில், 11 ஆட்டங்களில் விளையாடிய சச்சின், 673 ரன்களை குவித்திருந்தார். இதனை நடப்பு உலகக் கோப்பையில், 10 போட்டிகளிலேயே விராட் கோலி தகர்த்துள்ளார்.
சதம், ரன் குவிப்புடன் சேர்த்து அரை சதத்தை கடந்ததிலும் சச்சின் படைத்த சாதனையை கோலி திருத்தியுள்ளார். ஒரு உலகக்கோப்பை தொடரில் 7 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை சச்சின் பெற்றிருந்தார். நடப்பு உலகக்கோப்பையில் 8 முறை 50 ரன்களுக்கு மேல் விளாசிய விராட், எட்டாத உயரம் எதுவுமில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
சச்சினின் சாகசங்களை முறியடித்ததுடன், தனக்கான புதிய சாதனை பக்கங்களையும் கோலி படைத்து வருகிறார். அதன்படி ஒரு, ஒரு நாள் உலகக்கோப்பை, ஒரு டி20 உலகக் கோப்பை, ஒரு ஐபிஎல் தொடர் என மூன்று தொடர்களிலும் அதிக ரன் குவித்த வீரர் என்ற மகுடத்தையும் கிங் கோலி சூடியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கோலி எடுத்துள்ள ரன்கள் 13,677. அதில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களால் வந்த ரன்கள் வெறும் 6018, அதாவது 44 சதவிகிதம் ரன்கள் மட்டுமே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களால் வந்தது. மீதியுள்ள 7659 ரன்கள் ஓடி ஓடியே எடுத்தது, அதாவது 56 சதவீதம் ரன்களை சிங்கிள், டபுள், ட்ரிப்பிள் என ஓடியே எடுத்துள்ளார். “இப்படி புதிது புதிதாக சாதனைகளைப் படைத்துக் கொண்டே சென்று கொண்டிருக்கும் கோலியின் சாதனையை, அடுத்து யார் தகத்தெறிவார்கள்?’ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் எழும். கிரிக்கெட் போட்டிகளில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
அந்த காலத்தில் இருந்த கிரிக்கெட் வேறு… இந்த காலத்தில் விளையாடும் கிரிக்கெட் வேறு… மரபணு மாற்றம் போல் வருங்காலத்திலும் அது மாற்றத்தை உருவாக்கும். சச்சினை போலவே விராட் கோலியும் யாரும் செய்திடாத பல உலக சாதனைகளைப் படைத்துவிட்டு தான் செல்வார் என்பதே உலக கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிகையாக உள்ளது!