Amazing Tamilnadu – Tamil News Updates

இறுதிப் போட்டியில் அஸ்வின் உள்ளே…யார் வெளியே? ரோகித் சர்மாவின் பலே திட்டம்!

அகமதாபாத் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ள இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் முரட்டு ஃபார்மில் எதிரணி பந்துவீச்சாளர்களை கதறவிட்டு வரும் நிலையில், 6 விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ், ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு பெரிய அளவில் வேலை வைக்காதபடியே இந்த உலகக்கோப்பைத் தொடர் முழுவதுமே இந்திய அணி வீரர்கள் விளையாடியுள்ளனர்.

இந்த நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை பதம் பார்க்க இந்திய அணி ஒரு பக்க மாஸ்டர் பிளானை தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி பேட்ஸ்மேன்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறார் முகமது ஷமி. அது மட்டுமில்லாமல் பும்ராவும் தனது பங்குக்கு 18 விக்கெட்டுகளை எடுத்து அசுர பலத்தில் உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, ஆஸ்திரேலிய அணியினர் சுழல் பந்துவீச்சுக்கு கடுமையாக திணறி வரும் நிலையில், அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்கலாமா என கேப்டன் ரோகித் சர்மா யோசித்து வருகிறார். பொதுவாக இந்திய மைதானங்கள் சுழல்பந்து வீச்சுக்கு எடுபடும்  தன்மை கொண்டிருக்கும். இதனால் வலுவான ஆஸ்திரேலியா அணியைக் கட்டுப்படுத்த, மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால் அணிக்கு மேலும் பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

 ஜடேஜா, குல்தீப் யாதவ், அடுத்து அனுபவம் வாய்ந்த அஸ்வினை அணியில் சேர்த்தால் ஆஸ்திரேலியா அணியில் உள்ள வார்னர், டிரவிஸ் ஹெட் உள்ளிட்ட இடது கை பேட்ஸ்மேன்களைக் காலி செய்ய பெரும் உதவியாக இருக்கும்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலியா அணி வீரர்கள், சுழல்பந்தை எதிர்கொள்ள கடுமையாக தடுமாறினர். அதனைப் போலவே, இந்திய அணியில் ஜடேஜா அஸ்வின் சுழல்பந்து இணை, பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித்  தந்துள்ளனர். குல்தீப் யாதவின் சைனா மேன் பந்துவீச்சு, பதற்றமான நேரங்களில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளது.

இதனால் ரோகித் சர்மா என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சுழல்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள் என்பதால் தான், சென்னையில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் மூன்று சுழல்பந்து வீச்சாளர்களுடன் அஸ்வினை களமிறக்கினார் ரோகித் சர்மா. அவர் நினைத்தது போலவே அஸ்வினும் 10 ஓவர்களை வீசி, 34 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை தூக்கினார்.

அதேபோல் இறுதிப்போட்டியில் இந்திய அணி மூன்று சுழல்பந்து வீரர்களுடன் களமிறங்கினால், அணியில் யாரை உட்கார வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இந்திய அணி அஸ்வினை களமிறக்கினால் 6 ஆவது வீரரான சூர்யகுமார் யாதவை தான் உட்கார வைக்க முடியும்.

அப்படி செய்தால் இந்திய அணிக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் என்னதான் அனுபவ வீரராக இருந்தாலும் அஸ்வினுக்கு இந்த இறுதிப் போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. தற்போதைக்கு இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், இந்த செட்டிலான அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை என்றும் ஏற்கனவே கேப்டன் ரோகித் சர்மா அறிவித்து இருந்தார்.

அதுமட்டும் இன்றி தற்போது தொடர்ச்சியாக இந்திய அணி 10 வெற்றிகளை பெற்றுள்ள வேளையில், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. இவ்வேளையில் விளையாடும் வீரர்களின் பிளேயிங் லெவனில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், அது அணிக்கு சற்று பாதகமாக கூட அமையலாம்.

போட்டி அகமதபாத் மைதானத்தில் நடைபெறுவதால் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு நன்றாகவே கைகொடுக்கும். இதனால் இறுதிப்போட்டியில் அணியில் என்ன மாற்றம் நிகழ்ப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் கடந்த 6 போட்டிகளாக இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யாமலே விளையாடி வந்துள்ளதால், அதே அணியே இறுதிப்போட்டியில் களமிறங்க வேண்டும் என்ற ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version