Amazing Tamilnadu – Tamil News Updates

இந்திய அணி கோட்டைவிட்ட 5 தவறுகள்…ரோகித் இதை செய்திருக்க கூடாது?…

உலகக்கோப்பை போட்டியில் இறுதிப்போட்டியில் நுழையும் வரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, எப்படியும் உலகக்கோப்பையை வென்றுவிடும் என மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கிடந்த இந்திய ரசிகர்களின் கனவைத் தவிடுப்பொடி ஆக்கிவிட்டது பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி…

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்த அகமாதபாத் மைதானத்தில் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். “அடடா ரொம்ப நல்லதா போச்சே… 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை பழிவாங்க அவர்களே ஃபீல்டிங்கைத் தேர்வு செய்து, அதற்கு அஸ்திவாரம் போட்டு விட்டார்களே…” என இந்திய ரசிகர்கள் குஷியில் மூழ்கிப்போய் இருந்தனர்.

ஆனால் அந்த குஷி ரோம்ப நேரம் நீடிக்கவில்லை.இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும் சும்பன் கில்லும் ஜோடி, முதல் மூன்று ஓவர்களை நிதானமாகவே ஆடியது. வழக்கம்போல ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை ஆடி, 140 கோடி இந்தியர்களையும் டிவி முன் கொண்டாட்டத்தில் திளைக்க வைத்தார். ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.. ஆம், சுப்மன் கில் ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட் ஆகிப்போக, அணிக்கு பதற்றம் தொற்றியது..அடுத்து வந்த விராட் கோலி, மறுபக்கம் அதிரடி காட்டிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவுக்கு சிங்கிள் எடுத்துக் கொடுத்து விளையாடிக்கொண்டிருந்தார்.

ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த திட்டம் தீட்டிய ஆஸ்திரேலியா, பவர்பிளே 7வது ஓவரிலேயே சுழல்பந்து வீச்சு எனும் ஆயுதத்தை எடுத்தது. சர்வ சாதாரணமாக சுழல் பந்துவீச்சை ஆடும் ரோகித் சர்மா, அதனைப் பயன்படுத்திக் கொண்டு அதிரடியைத் தொடர்ந்தார்.

தேவையில்லாத ஷாட் தேர்வு

இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, 597 ரன்களை எடுத்துள்ளார். அதில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளில் மட்டும் 450 ரன்களை விளாசி இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே களத்தில் இருக்கும்வரை அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா நினைத்திருந்தால் அரை சதங்களை சதங்களாக மாற்றி இருக்க முடியும். 6 முறை 40 ரன்களுக்கு மேல் அடித்து ஆவுட் ஆகியுள்ளார். சொந்த சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா, தேவையில்லாத ஷாட்களால் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதிப் போட்டியில் கூட, மேக்ஸ்வேல் ஓவரில் சிக்சரை பறக்கவிட்ட அடுத்த பந்திலேயே இறங்கி மிட் ஆனில் அடித்தபோது கேட்ச் ஆனார்.

என்னதான் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், கில் 4 ஆவது ஓவரிலேயே ஆவுட் ஆகி வெளியேறியதால், ‘கேப்டன் ரோகித் சர்மாசற்று நிதனமாக ஆடியிருக்கலாம்’ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

சொதப்பிய மிடில் ஆர்டர்…

ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் என இந்தியாவின் மிடில் ஆர்டர் அணி இறுதிப்போட்டியில் கடுமையாக சொதப்பியது. மைதானம் விக்கெட் விழுவதற்கு சாதகமாக இருந்ததால் கோலி, பந்துக்குப் பந்து ரன்களை சேகரிக்கவே ஆடினார். பவுண்டரிகளுக்கு டார்கெட் செய்தால் அங்கே விக்கெட் விழுந்துவிடுமோ என எண்ணத்திலேயே ஒரு மிகச்சிறந்த அரை சதத்தை அடித்துக் கொஞ்சம் வலுசேர்த்தார். ஆனால் ரோகித் சர்மா அவுட் ஆன பின்பு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், பந்தை தடுக்க முயன்றபோது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியதால், போட்டி மொத்தமும் விராட் கோலி மற்றும் ராகுலின் சுமையானது. இருப்பினும் இருவரும் பவுண்டரிக்கு குறிவைக்காமல் 280, 290 ரன்களையே இலக்காக வைக்க வேண்டும் என பொறுப்புடன் ஆடினர்.  கிட்டத்தட்ட 97 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் விக்கெட் விழாமல் ஆடியே விக்கெட்டை இழந்தனர்.

விராட் கோலி விக்கெட் விழுந்த பின்பு சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் டிராவிட்டும் ஒரு நல்ல முடிவை எடுத்தனர். சூர்யகுமாருக்குப் பதில் ஜடேஜாவை களமிறங்க வைத்தனர். விக்கெட் விழும் சமயத்தில் கடைசி 8 ஓவர்களில் ரன்களைக் குவிக்க தேவைப்படுவார் என்ற நோக்கிலேயே ஜடேஜா களமிறக்கப்பட்டார். ஆனால் நடந்ததோ வேறு… ஜடேஜா விக்கெட் வீழ்ந்த பிறகு முக்கியமான போட்டியில் பேட்டிங் வாய்ப்பு கிடைத்த சூர்யகுமார் யாதவும் சொதப்பலின் உச்சத்துக்கே சென்றார்.  ஒரு பக்கம் விக்கெட் விழுந்துக்கொண்டே போக, மறுபக்கம் குல்தீப் யாதவுக்கு சிங்கிள்ஸ் ஆடி கொடுத்து வந்தார் சூர்யகுமார்..

சுத்தி அணை கட்டிய ஆஸ்திரேலியா ஃபீல்டர்கள்

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எந்த பக்கம் பந்தை அடித்தாலும், அதனை பாய்ந்து பாய்ந்து பிடித்தனர் ஆஸ்திரேலியா ஃபீல்டர்கள். 20 பேர் பீல்டிங் செய்வது போல் பந்து செல்லும் இடமெல்லாம் ஆஸ்திரேலியா வீரர்கள் பாய்ந்து சென்று பிடித்தனர்.

பந்துவீச்சில் இந்தியா செய்த தவறுகள்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பவுலர்கள் மொத்தமாக 99 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன், 2007 உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணி பவுலர்கள் 97 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அந்த சாதனையை இந்த உலகக்கோப்பையில் இந்தியா முறியடித்துள்ளது. இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்கூட 229 ரன்களை அடித்து, இங்கிலாந்து அணியை 129 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் கூட 199 ரன்களுக்கு ஆல் ஆவுட் செய்திருந்தது.

இந்த நிலையில் 240 ரன்களை நமது பந்துச்வீச்சாளர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியா சேஸ் செய்ய விடமாட்டார்கள் என நம்பிக்கையாக இருந்தோம். முதல் ஓவரை வீசிய பும்ராவின் முதல் பந்தே கோலியிடம் சிலிப் கேட்சாக சென்றது. ஆனால் அந்த வாய்ப்பும் பறிபோனது. அப்படி அந்த கேட்சை கோலி பிடித்து இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே பதற்றத்தைக் கொடுத்து இருக்கலாம்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் முதல் ஓவரை வீசும் பும்ராவுக்கு பிறகு இரண்டாவது ஓவரை வீசுவார் சிராஜ். ஆனால், இந்தப் போட்டியில் 2 ஆவது ஓவரையே முகமது ஷமியிடம் கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. இருந்தும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி டேவிட் வார்னரை தூக்கினார் ஷமி.

பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய மைதானங்களில் சுழல்பந்து வீச்சுக்கு கடுமையாக திணறுவார்கள் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அஸ்வினை அணியில் எடுத்து இருந்தால், அது நிச்சயம் இந்திய அணிக்கு ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொடுத்து இருக்கும். ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் என மூன்று பேருடன் களமிறங்கி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும். கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிபோட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட்டை இந்த முறையும் இந்திய அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தொடரும் சேஸ் ராசி

உலகக்கோப்பை தொடரில் 2011,2015,2019 என மூன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சேஸ் செய்த அணியே கோப்பையை வென்றது. அதேபோல் 2014, 2016, 2021, 2022  டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் சேஸ் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை இந்திய அணி கேப்டன் டாஸ் வென்று இருந்தால் நிச்சயம் அவரும் சேஸிங்கையே தேர்வு செய்து இருப்பார். அதுமட்டும் இல்லாமல் 2 ஆவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு இரவு நேர லைட்டிங்கில் பந்து நன்றாக தெரிந்தது. இதனாலேயே அவர்கள் இந்திய அணி பந்துவீச்சுகளைச் சிதறடித்தனர்.

Exit mobile version