Amazing Tamilnadu – Tamil News Updates

திராவிட மாடல் அரசு Vs ஒன்றிய பாஜக அரசு: வித்தியாசங்களைப் பட்டியலிட்ட மு.க. ஸ்டாலின்!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, விடியல் பயணத் திட்டம் தொடங்கி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் ‘திட்டம், ‘நான் முதல்வன்’ திட்டம், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்… என தனது தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார்.

திராவிட மாடல் அரசு Vs ஒன்றிய பாஜக அரசு

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படும் திராவிட மாடல் அரசுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசுக்கும் இடையேயான வித்தியாசங்களையும் பட்டியலிட்டார்.

“மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது நிதி. அந்த நிதி ஆதாரத்தை பறிப்பது மாநில வளர்ச்சிக்கான ஆக்சிஜனை நிறுத்துகின்ற மாதிரி! அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மாநிலங்கள் ஒன்றிணைந்ததுதான் ஒன்றிய அரசு. இதை உணராமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கி வருகிறது. பிரதமரும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார். இந்த சுற்றுப்பயணங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள். இதை வெற்றுப் பயணங்களாக தான் பார்க்கிறார்கள். இதை சுற்றுப்பயணமாக பார்க்கவில்லை. இந்த பயணங்களால் ஏதாவது வளர்ச்சித் திட்டங்கள் இருக்கிறதா?

2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதுதான் கட்டுமானப் பணியை தொடங்கப் போவதாக நாடகம் நடத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்திடுவார்கள். சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி – தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி – இப்போது மட்டும் அடிக்கடி வருகிறாரே? என்ன காரணம்? தேர்தல் வரப் போகிறது. ஓட்டு கேட்டுதான் வருகிறார் என்று மக்களுக்குத் தெரியும்.

வெள்ள நிவாரணம் தரவில்லை

‘தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். தமிழ்நாட்டுக்கு அவர் என்ன வளர்ச்சி நிதியைக் கொடுத்துள்ளார்? ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை. வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடியைத் தரவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பணம் தரவில்லை, ஒப்புதலும் வழங்கவில்லை.பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசுதான்.

மக்களும், அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடப்பது கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்காக நடக்கின்ற ஆட்சி தான் இது! அதனால்தான் உங்கள் குடும்ப விழாவுக்கு வருகின்ற மாதிரி நீங்கள் எல்லாம் இங்கு உரிமையுடன் வந்திருக்கிறீர்கள்.

இதே உணர்வோடும், வளமோடும், நலமோடும் வாழ்வோம்! தமிழ்நாட்டையும் வாழ வைப்போம்! இந்தியாவுக்கும் வழிகாட்டியாக நாம் மாறுவோம்!” என மேலும் கூறினார்.

Exit mobile version