Amazing Tamilnadu – Tamil News Updates

ஐஐடிஎம் – ஆஸ்திரேலியப் பல்கலை. இணைந்து அறிமுகப்படுத்தும் புதிய பிஎச்டி!

ஐடி மெட்ராஸ்சும் ஆஸ்திரேலியாவில் உள்ள டெக்கின் பல்கலைக்கழகமும் இணைந்து, ஐஐடிஎம் டெக்கின் பல்கலைக்கழக ஆய்வு அகாடமி ஒன்றைத் தொடங்கி உள்ளன. இந்த அகாடமி, மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புகளை (PhD), வரும் கல்வியாண்டில் தொடங்க உள்ளது.

சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாத மின் உற்பத்தி, காலநிலை மாற்றம், சுகாதார தொழில் நுட்பம் ஆகியவை குறித்து அந்த ஆராய்ச்சிப் படிப்புகள் இருக்கும் என அந்த அகாடமி தெரிவித்துள்ளது. வரும் கல்வியாண்டில், இந்த அகாடமி 30 ஆய்வு மாணவர்களைத் தேர்வு செய்ய இருக்கிறது.

வழக்கமாக பிஎச்டி படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த அகாடமியில், நான்கு ஆண்டு பிஎச்டி படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமான அளவில் உதவித் தொகை வழங்கப்படும்.

திறமை வாய்ந்த முன்னணி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். மாணவர்களின் ஆய்வுக்கு, உலகத்தரம் வாய்ந்த ஆய்வு வசதிகள் இந்த அகாடமியில் உள்ளன. மாணவர்களின் ஆய்வோடு தொடர்புடைய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழில் நிறுவனங்களுடனும் அகாடமி இணைந்து பணியாற்றும். இதன் மூலம், மாணவர்கள் தங்களின் ஆய்வின் நடைமுறை அறிவை, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

மார்ச் மாதம் ஆய்வுப் படிப்பு தொடங்கும் என அகாடமி அறிவித்துள்ளது. ஐஐடிஎம் டெக்கின் பல்கலைக்கழக ஆய்வு அகாடமி குறித்த மேலும் விபரங்களை அறிந்து கொள்ள www.deakin.edu.என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.

Exit mobile version